தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். செப்டம்பர் 28-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் பின்னணி இசையை தனியாக ஓஎஸ்டி ஆல்பமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, ‘டோரதி’யில் இடம்பெற்றுள்ள பின்னணி இசையின் 18 டிராக்குகள் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகின்றன.
இதற்காக சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ‘டோரதி’ படத்திற்காக தான் உருவாக்கிய இசையை இளையராஜா லைவ் ஆர்க்கெஸ்ட்ராவுடன் இசைக்க இருக்கிறார். இதுதொடர்பான நிகழ்வை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சுப்பராஜ், தனது அடுத்த படத்திற்கும் இளையராஜாதான் இசையமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ‘டோரதி’ படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலையும் ரிலீஸுக்கு முன்பாக வெளியிட உள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
