இயக்குநர் சுந்தர் சி – நடிகை குஷ்பு தம்பதியருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அவர் தற்போது ‘ஆரம்பம்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். இளைய மகள் அனந்திதா, சமீபத்தில் வெளியான ‘டபுள் ஆக்குபென்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியதுடன், தற்போது ‘அட்டாக்கர்’ திரைப்படத்தில் நடித்தும் வருகிறார்.
சமீப காலமாக குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவின் உடல் எடையை குறித்தும், இளைய மகள் அனந்திதாவை திருநங்கையுடன் ஒப்பிட்டும் சமூக வலைதளங்களில் சிலர் கேலி செய்து பதிவிட்டனர். இதனால் வேதனையடைந்த குஷ்பு, தனது குடும்ப புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு தனது கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில், “இது என் குடும்பம். அன்பு, நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையில் உருவான குடும்பம். இன்று நாங்கள் இருக்கும் நிலையை அடைய பல போராட்டங்களை சந்தித்துள்ளோம். கடினமாக உழைத்து, பல தடைகளை தாண்டியே இந்த இடத்தை அடைந்தோம். சில நேரங்களில் தோல்வியடைந்தாலும், மீண்டும் எழுந்து போராடுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், “எங்கள் குழந்தைகளை மிகுந்த பொறுப்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்த்தோம். பிரபலங்களின் குழந்தைகள் என்ற அடையாளத்தை பயன்படுத்தி எந்தச் சலுகையையும் பெற அவர்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அவர்கள் மீது எங்களுக்கு எப்போதும் பெருமைதான். ஆனால், சிலர் மலிவான பிரபலத்திற்காக என் குழந்தைகளை அவமதிப்பதை ஒரு தாயாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “அவர்களின் தரம் தாழ்ந்த கருத்துகளுக்கு அதே மொழியில் பதில் சொல்ல எனக்குத் தெரியும். ஆனால், என் தாய் எனக்குக் கற்றுக்கொடுத்த பண்புகளை நான் அவமதிக்க விரும்பவில்லை. நான் அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைக்க வேண்டாம். ஒரு தாயை ஒருபோதும் சீண்டாதீர்கள். தன் குட்டிகளை காக்கும் புலியைப் போல, தேவையான நேரத்தில் நான் போராடுவேன்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.மேலும், தங்களைப் பற்றி தவறாக பேசும் யூடியூபர்களையும் மறைமுகமாக சாடிய குஷ்பு, “இன்று நமக்காக நாமே குரல் கொடுக்கவில்லை என்றால், இப்படிப்பட்டவர்கள் நம்மை தொடர்ந்து மிதித்துக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தானே மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். யாரும் உங்களை அவமதிக்க அனுமதிக்காதீர்கள்” என்று தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
