‘படம் தோல்வியடைந்தால் கதாநாயகியை மட்டும் குறை சொல்லாதீர்கள்’ – பாக்யஸ்ரீ போர்ஸ் உருக்கம்

‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸ், அதனைத் தொடர்ந்து ‘காந்தா’, ‘கிங்டம்’, ‘ஆந்திரா கிங் தாலுகா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும், அந்தப் படங்கள் எதுவும் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாததால், அவர் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த நிலையில், தற்போது அவர் நடித்துள்ள ‘லெனின்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவில், பாக்யஸ்ரீ போர்ஸ் தனது மனவேதனையை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், “ஒரு திரைப்படத்தின் வெற்றியையும் தோல்வியையும் பற்றிய என்னுடைய பார்வை பலருடைய பார்வையிலிருந்து மாறுபட்டது. ஒரு நடிகையாக நான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் செய்வதே எனக்கு வெற்றி. ஆனால், பலர் ஒரு படத்தின் வசூலை மட்டுமே வெற்றிக்கான அளவுகோலாக பார்க்கிறார்கள்.

நான் சரியாக நடிக்கவில்லை என்றாலோ, ஒரு காட்சியை சரியாக வெளிப்படுத்தத் தவறிவிட்டாலோ, அல்லது என் நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ, ஒரு நடிகையாக நான் தோல்வியடைந்ததாக ஏற்றுக்கொள்வேன். ஆனால், ஒரு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறைவாக இருந்தால், அதற்கு என்னையே காரணம் என்று கூறுவது சரியான அணுகுமுறை அல்ல” என்றார்.

மேலும், “ஒரு படம் தோல்வியடைந்தால் அதற்காக கதாநாயகிகளை மட்டும் குறை சொல்வது நியாயமல்ல. தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று படங்கள் தோல்வியடைந்தாலே உடனடியாக ‘துரதிர்ஷ்டசாலி’ என்ற முத்திரையை குத்திவிடுகிறார்கள். நானும் அந்த மாதிரியான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறேன். என்னை மட்டுமல்ல, எந்த கதாநாயகியையும் இவ்வாறு விமர்சிப்பது தவறானது” என்று அவர் தெரிவித்தார். பாக்யஸ்ரீ போர்ஸின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பேச்சு, தொடர் தோல்விப் படங்களுக்குப் பிறகு அவர் எதிர்கொண்ட மனஅழுத்தத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading