இயக்குநர் முத்தையா, ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உள்ளிட்ட கிராமத்து பின்னணியிலான ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். அவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சமீப காலமாக வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது அவர் நடிகர் அருண் விஜயை கதாநாயகனாக வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் கதாநாயகியாக யார் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வந்த நிலையில், தற்போது அதற்கான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மிர்ணா மேனன், இந்தப் படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிர்ணா மேனன் ஏற்கனவே தமிழில் ‘புர்கா’, ‘களவாணி மாப்பிள்ளை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முத்தையா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
