நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் பாவா லட்சுமணன். ஏராளமான திரைப்படங்களில் தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த அவர், கடந்த சில ஆண்டுகளாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். உடல்நிலை பாதிப்பு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதிலிருந்தும் விலகியிருந்தார். சமீபத்தில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, பாவா லட்சுமணனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், நீரிழிவு நோயின் தீவிர பாதிப்பால் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், வீட்டு வாடகை செலுத்தவும், மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கவும் கூட பொருளாதார வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்த தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, நடிகர் கூல் சுரேஷ் அவருக்கு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்ததுடன், அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்கி வழங்கினார். அதேபோல் நடிகர் ஜீவா, தொலைக்காட்சி நடிகர் பாலா ஆகியோரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். மேலும், நடிகர் லெஜெண்ட் சரவணன் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி பாவா லட்சுமணனுக்கு ஆதரவாக நின்றார்.
இந்த நிலையில், பாவா லட்சுமணனுக்கு மேலும் ஒரு முக்கிய உதவி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமைச்சர் ராஜ்மோகன், தனக்கு எம்.எல்.ஏ.வாக வழங்கப்பட்ட அரசு வீட்டை தற்காலிகமாக பாவா லட்சுமணன் தங்குவதற்காக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு விரைவில் நிரந்தரமாக தங்கக்கூடிய ஒரு வீட்டை ஏற்பாடு செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
