‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் இணையும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் மீண்டும் தங்களது கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்தப் படத்தில் புதிதாக எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் மற்றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வரும் நிலையில், சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு இந்த வெளியீட்டு தேதியை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் உள்ளிட்ட புரமோஷன் அப்டேட்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
