மறைந்த “திரைக்கதை மன்னன்” இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் திரைப் பயணம்!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகில் ‘திரைக்கதை மன்னன்’ என்ற புகழைப் பெற்ற இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமானது தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல திறமைகளை ஒருங்கே கொண்டிருந்த அவர், இயக்குநராகவும், நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கியவர். அவரது வாழ்க்கைப் பயணம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளது. 1953 ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று ஈரோடு மாவட்டத்தில் கிருஷ்ணசாமி நாயுடு – அமராவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் கே. பாக்யராஜ். சிறுவயதிலிருந்தே சினிமா மீது கொண்டிருந்த ஆழ்ந்த ஆர்வம் காரணமாக தனது சொந்த ஊரை விட்டு சென்னை வந்தார். பியூசி வரை கல்வி கற்ற அவர், இயக்குநர் ஜி. ராமகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

பின்னர் 1977-ஆம் ஆண்டு தனது குருநாதரான பாரதிராஜாவின் முதல் படைப்பான 16 வயதினிலே திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும், சிறிய கதாபாத்திரத்திலும் தோன்றினார். அதன்பின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்திலும் உதவி இயக்குநராகவும், நடிகராகவும் பணியாற்றினார். சிவப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்ததுடன், அந்தப் படத்தின் வசனங்களையும் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம் அவரது திறமை பரவலாக கவனிக்கப்பட்டது.

பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பாக்யராஜ், அதற்கான வசனங்களையும் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகர் சுதாகரை கதாநாயகனாக நடிக்க வைத்து, தானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் ஒரு கை ஓசை திரைப்படத்தில் கதாநாயகனாகவும், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

இயக்குநராக பாக்யராஜின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் மௌன கீதங்கள். அதன்பிறகு அவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாக அமைந்ததுடன், அவருக்கென தனி பாணியையும் உருவாக்கின.கன்னிப்பருவத்திலே திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியதுடன், அதில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார்.ஏவி.எம். நிறுவனம் வழக்கமாக தங்களது ஆஸ்தான இயக்குநர்களுடன் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், முதல் முறையாக கே. பாக்யராஜை இயக்குநராக தேர்வு செய்து தயாரித்த படம் முந்தானை முடிச்சு. இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்று, பாக்யராஜின் புகழை உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்த வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற விழாவில், அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., பாக்யராஜை தனது கலை வாரிசு என்று அறிவித்த சம்பவம் அந்நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகராகவும், இயக்குநராகவும், கதாசிரியராகவும் ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பங்களித்த பாக்யராஜ், சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும், தனது குருநாதரான பாரதிராஜாவையும் ஒரே படத்தில் இயக்கும் வாய்ப்பைப் பெற்றது தாவணிக் கனவுகள் திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. அது அவரது நீண்ட நாள் கனவாகவும் இருந்தது.

சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, பொய் சாட்சி, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு, எங்க சின்ன ராசா, ஆராரோ ஆரிரரோ, பவுனு பவுனுதான், ராசுக்குட்டி, அம்மா வந்தாச்சு, சுந்தர காண்டம், வீட்ல விஷேசங்க, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் சிறப்பாக விளங்கினார். இது நம்ம ஆளு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமான அவர், அதன் பிறகு பல படங்களுக்கு இசையமைத்தார். ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் இந்தி பதிப்பான ஆக்ரி ராஸ்தா திரைப்படத்தை அமிதாப் பச்சனை கதாநாயகனாக வைத்து இயக்கியதன் மூலம் இந்தி திரையுலகிலும் தனது முத்திரையைப் பதித்தார். அவரது பல வெற்றித் திரைப்படங்கள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா உள்ளிட்ட பல மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

திரைப்பட உலகைத் தாண்டியும் எழுத்துலகில் தனித்துவம் பெற்ற பாக்யராஜ், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாக்யா வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். புதிய வார்ப்புகள், தாய்க்குலமே தாய்க்குலமே திரைப்படங்களுக்காக தமிழக அரசின் விருதுகளையும், ஒரு கை ஓசை திரைப்படத்தில் சிறந்த நடிப்புக்கான மாநில விருதையும் பெற்றார். 1983-ஆம் ஆண்டு முந்தானை முடிச்சு திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார்.

உதவி இயக்குநராக இருந்த காலத்தில் நடிகை பிரவீணாவுடன் காதலித்து, 1981-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், 1983-ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பிரவீணா உயிரிழந்தார். பின்னர், டார்லிங் டார்லிங் டார்லிங் திரைப்படத்தில் அவருடன் நடித்த நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரண்யா என்ற மகளும், நடிகர் சாந்தனு என்ற மகனும் உள்ளனர். பாரிஜாதம் திரைப்படத்தின் மூலம் மகள் சரண்யாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய அவர், சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் மகன் சாந்தனுவையும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். தற்போது சாந்தனு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading