லஷ்மி சரவணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிங்கம்’ வெப் தொடரில் நடிகர் கதிர் நடித்துள்ளார். 1990-களில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாக உள்ளது. இது குறித்து கதிர் பேசுகையில், “நான் நடித்த ‘சுழல்’ வெப் தொடர் நல்ல வெற்றி பெற்றது. அதன் பின்னர்தான் இந்த கதை என்னிடம் வந்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக இந்த தொடரை உருவாக்கி வருகிறோம். இடையிடையே பல நடிகர்கள் மாறினார்கள். நான் கூட இந்த திட்டத்திலிருந்து மாற்றப்படுவேனோ என்று நினைத்தேன். ஆனால் அது மட்டும் நடக்கவில்லை. நான்கு ஆண்டுகள் உழைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அத்தனை காலமும் அதே உற்சாகத்துடன் இந்த தொடரை உருவாக்கியுள்ளோம்.
1980 மற்றும் 1990-களின் பின்னணியில், கபடி விளையாட்டு மற்றும் கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது. அந்த காலகட்டத்தை அப்படியே திரையில் மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் இயக்குநர். திவ்யபாரதி மற்றும் பூர்ணிமா ரவி ஆகிய இருவரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக திவ்யபாரதிக்கு ‘பேச்சுலர்’ திரைப்படத்திற்குப் பிறகு இது முற்றிலும் மாறுபட்ட மற்றும் வலிமையான கதாபாத்திரமாக அமையும். அடுத்ததாக சினிமாவிலும் நடிக்க உள்ளேன். அது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.
இந்த வெப் தொடர் குறித்து பேசிய இயக்குநர், “நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, லிங்கம் தொடர்புடைய பலரிடம் பேசி இந்த கதையை உருவாக்கினோம். ஒரு முக்கியமான காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது நடிகர் போஸ் வெங்கட்டின் தாயார் காலமானார். ஆனாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர் அதை வெளிப்படுத்தாமல் தொடர்ந்து நடித்தார். பின்னர் எங்களது தேவைக்காக சில நாட்களில் மீண்டும் வந்து தனது காட்சிகளில் நடித்துக் கொடுத்தார்” என்று தெரிவித்தார்.
