லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள ‘DC’… வெளிவந்த முக்கிய அப்டேட்!

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘DC’ திரைப்படம், வரும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் மூலம் ‘தேவதாஸ்’ என்ற வலுவான கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகை வாமிகா கபி நடித்துள்ளார். ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ திரைப்படங்கள் மூலம் தனித்துவமான ஆக்‌ஷன் பாணியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

லோகேஷ் கனகராஜின் விருப்பமான இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது.

‘DC’ திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த மே 17ஆம் தேதி நடைபெற்ற புகழ்பெற்ற கான் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. தேவதாஸ் மற்றும் சந்திரா ஆகியோருக்கு இடையே நடைபெறும் தீவிரமான காதலையும், வன்முறை நிறைந்த உலகையும் மையமாகக் கொண்ட கிரைம் திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

மேலும், “இந்த திரைப்படம் எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து நடிகராக நடிக்காமல் மீண்டும் இயக்குநராகவே செயல்பட உள்ளேன்” என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த ‘DC’ திரைப்படம் 2026 ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் வகையில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading