‘பாலன் தி பாய்’ படத்தை பாராட்டிய சூர்யா மற்றும் ஜோதிகா!

நடிகர் சூர்யா, இயக்குநர் சிதம்பரம் இயக்கிய ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார். இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இந்த திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னணி கதாபாத்திரங்களில் ஆதிசேஷன் மற்றும் ஃபர்ஹானா பலத்திங்கல் நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், உருவாக்கத் தரத்திலும் திரைக்கதை அமைப்பிலும் சிறந்த அனுபவத்தை வழங்கியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் நாளுடன் ஒப்பிடும்போது தொடர்ந்து அதிக டிக்கெட் விற்பனை நடைபெற்று வருவதால், வணிக ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “பாலன் திரைப்படத்தை பார்த்தேன். இன்னும் அந்த திரைப்படத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ போன்ற மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தைத் தேர்வு செய்திருப்பதே இயக்குநர் சிதம்பரமும் அவரது குழுவும் ரசிகர்களுக்கு என்ன வழங்க விரும்பினர் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

இந்த திரைப்படம் மலையாள சினிமாவில் இருந்து வந்துள்ள மற்றொரு அற்புதமான படைப்பு. ஜித்து மாதவன் எழுதிய இந்த வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து, பெரும்பாலும் அறிமுக முகங்களைக் கொண்ட நடிகர் குழுவுடன் அதை உருவாக்கிய இயக்குநருக்கு எனது மரியாதைகள். ஃபர்ஹானா பலத்திங்கல், சிறுவர்கள் ஆதிசேஷன், முகம்மது ஜினான் மற்றும் அப்பாஸ் கதாபாத்திரத்தில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய டொவினோ தாமஸ் ஆகியோரின் பங்களிப்பு இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் மற்றும் ஒலியமைப்பு என ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சமும் சிறப்பாக இருந்தது. உண்மையாகவே இந்த திரைப்படம் என்னை ஆழமாக பாதித்தது. குறிப்பாக இந்த புதிய முகங்களின் நடிப்பைப் பார்த்தபோது, நானும் என் நடிப்புத் திறமையை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது” என்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகை ஜோதிகாவும் இந்த திரைப்படத்தை பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார். தற்போது சூர்யா, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading