பழம்பெரும் நடிகை சுமித்ராவின் மகளான உமா, 2000-களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். ‘வீரநடை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், ‘கலகலப்பு’, ‘குபேரன்’, ‘கடல் பூக்கள்’, ‘தென்றல்’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘இலக்கணம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து சின்னத்திரை தொடர்களில் நடித்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், உமாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பதிவில் உமா, “எனக்கு ஆரம்ப நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிர்ச்சி, மறுப்பு, நம்ப முடியாத நிலை என பல்வேறு உணர்வுகளை நான் சந்தித்தேன். இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதும், அதை மனதில் ஜீரணிப்பதும் எளிதாக இருக்கவில்லை. ‘ஏன் எனக்கு? ஏன் இப்போது? அடுத்து என்ன நடக்கப் போகிறது?’ என்ற பல கேள்விகள் என் மனதை ஆக்கிரமித்தன.
என்னுடன் உறுதியாக நின்று தைரியம் அளித்த என் கணவருக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மகனின் மனவலிமைக்கும் நன்றி. அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையுடன் என்னுடன் தொடர்ந்து இருக்கும் என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் தைரியமே எனது தைரியமாக மாறியுள்ளது. கண்ணீர், பிரார்த்தனைகள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் வழியாக, அதிர்ச்சியில் இருந்து உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு நான் மாறியிருக்கிறேன். மனம் தளர்வதற்கோ அல்லது தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கோ நான் தயாராக இல்லை. வாழ்க்கையை அதன் இயல்பான வடிவத்தில் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளவே நான் முயற்சிக்கிறேன்.
ஒவ்வொரு நாளையும் தனித்தனியாக எதிர்கொள்ளப் போகிறேன். என்னிடமுள்ள முழு மனவலிமையுடனும் இதை எதிர்த்து போராடுவேன். நிச்சயமாக குணமடைந்து மீண்டும் வருவேன் என்று உறுதியளிக்கிறேன். தயவுசெய்து எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்தப் பயணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
