பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய கவுரவமான பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். இந்த நிலையில், திரைப்படத் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, கடந்த ஜூன் 23ஆம் தேதி பத்ம பூஷண் விருதைப் பெற்றார்.
இந்த கவுரவத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், நடிகர் மம்மூட்டி நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினர். நடிகரின் புதிய தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சிறப்பு போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது,
“நம்முடையவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய சினிமாவிற்கு நடிகர் மம்மூட்டி வழங்கிய சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தற்போது ‘ஓம்’ திரைப்படத்தில் ‘இக்கா’வின் வருகைக்காக காத்திருங்கள். உங்கள் காத்திருப்புக்கு அது முழுமையாக தகுதியானதாக இருக்கும்” என்று மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த திரைப்படம் தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகியுள்ளது. மேலும், நடிகர்கள் மம்மூட்டி, தனுஷ், சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
