அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படமாக ‘சேயோன்’ உருவாகி வருகிறது. ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார்.
மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பகுதியின் பாரம்பரியம் மற்றும் கிராமத்து வாழ்வியலை பின்னணியாகக் கொண்ட கமர்சியல் எண்டர்டெய்னராக உருவாக்கப்பட்டு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். கன்னட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது மதுரையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு ஆக்ஷன் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சீமானும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில் சிவகார்த்திகேயன் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ‘சேயோன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
