நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு விழா சென்னை நகரில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “இந்த திரைப்படம் இசை ரீதியாகவும், முற்றிலும் மாறுபட்ட வணிக பாணியிலும், புதுமையான காட்சி மொழியுடனும் உருவாக உள்ளது. இதில் முற்றிலும் புதிய இசை வகையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
நான் துபாயில் வசித்து வந்தாலும், பெரும்பாலான நேரங்களில் சென்னையில்தான் இருக்கிறேன். என் மகள் துபாயில் கல்வி பயின்று வருவதால் அங்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. பணிகளின் தேவைக்கேற்ப துபாய் மற்றும் சென்னை இடையே தொடர்ந்து பயணம் செய்து வருகிறேன். நான் இசையமைக்கும் திரைப்படங்கள் தாமதமாக வெளியாகுவதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார்.
