Advertisement

பிரபுதேவா – வடிவேலுவின் ‘பேங் பேங்’ டீசர் வெளியீடு!

90களில் காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ், எங்கள் அண்ணா உள்ளிட்ட படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்த பிரபுதேவா – வடிவேலு கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இவர்களின் கூட்டணி மீண்டும் திரையில் தோன்றுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பப்லூ பிருத்விராஜும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தை தயாரித்த கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

‘பேங் பேங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசர் மூலம் ‘பேங் பேங்’ ஜோம்பி த்ரில்லர் காமெடி கதைக்களத்தில் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கவ்பாய் தோற்றத்தில் பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவரும் ஜோம்பிக்களுடன் மோதும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஜெயம் ரவியின் ‘மிருதன்’ படத்துக்குப் பிறகு தமிழில் உருவாகும் மற்றொரு ஜோம்பி திரைப்படம் என்பதால், ‘பேங் பேங்’ படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை இந்தாண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

—

Add a Comment

Leave a Reply