மலையாள திரைப்படத் துறையில் ‘அம்மா’ என்ற பெயரில் நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மோகன்லால் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நடிகை ஸ்வேதா மேனன் தலைமையிலான புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றது. ஆனால், கடந்த சில நாட்களாக நடிகர் சங்க நிர்வாகிகளுக்குள் பரஸ்பர குற்றச்சாட்டுகள் எழுந்து, ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் வரை செல்லும் நிலை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், முந்தைய நிர்வாகக் குழுவினர் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் இருப்பதாகவும், தனக்கு எதிராக சதி செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய ஸ்வேதா மேனன், தனது முழு நிர்வாகக் குழுவினருடன் இணைந்து சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லியில் பத்ம பூஷண் விருதைப் பெற்ற நடிகர் மம்மூட்டி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, நடிகர் சங்கத்தில் நிலவி வரும் தற்போதைய சர்ச்சைகள் அனைத்தும் சிறிய விஷயங்களே என்று குறிப்பிட்டார். மேலும், தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் நடைபெறட்டும், அதற்கான தீர்வு நிச்சயமாக கிடைக்கும். அதன் பிறகு என்ன நடக்கும் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே பொறுமையாக காத்திருந்து பார்க்க வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும், அவை நிச்சயமாக சரியாகிவிடும். தற்போதுள்ள குழப்பங்கள் நீங்கி விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று தெரிவித்துள்ளார்.
