இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘வாரணாசி’ தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ‘பாகுபலி: தி எடர்னல் வார்’ அனிமேஷன் படைப்பை முன்னிறுத்தி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமௌலி, ‘வாரணாசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “வாரணாசி திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முக்கியமான மற்றும் மிகப் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக படமாக்கப்பட்டுவிட்டன. தற்போது கதையை இணைக்கும் இடைக்கால மற்றும் முக்கியமான சிறிய காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறோம். திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்றால், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடையும்” என்று தெரிவித்தார்.
மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படம் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்து வருகிறார்.
