நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் பிருத்விராஜ், மலையாள சினிமாவின் முக்கியமான பிரபலங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவர் இயக்கிய ‘எம்புரான்’ திரைப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றதுடன், மலையாள சினிமாவில் உருவாக்கப்பட்ட அதிக பட்ஜெட் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. தற்போது, பிருத்விராஜ் இயக்குநர் ராஜமௌலியின் ‘வாரணாசி’ மற்றும் ‘ஐ நோ பாடி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய நேர்காணலில் பேசிய நடிகர் பிருத்விராஜ், “வாரணாசி போன்ற திரைப்படங்களை உருவாக்கும்போது, அதன் பிரம்மாண்டத்தை எவ்வளவு கணக்கிட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை நான் பார்த்ததில்லை. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியும் இதே கருத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார். எனக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தாலும், ராஜமௌலி அதைக் கவனமாகக் கேட்டு தனது கருத்தையும் பகிர்ந்துகொள்வார்.
30 ஆண்டுகளாக காத்திருந்து தனது முதல் திரைப்படத்தை இயக்கும் இயக்குநரைப் போலவே ராஜமௌலி இந்த படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார். எங்களுக்கு காலை 7 மணிக்கு முதல் காட்சி படமாக்கப்பட வேண்டும் என்றால், அவர் அதிகாலை 5 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தனது உதவி இயக்குநர்களுடன் இணைந்து ஒத்திகைகளை கவனித்து வருவார்.
ஒரு புதிய இயக்குநருக்குரிய அதே உற்சாகமும் அர்ப்பணிப்பும் இன்றும் அவரிடம் உள்ளது. ‘வாரணாசி’ திரைப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தபோது, ஒரு குறிப்பிட்ட காட்சியைச் சுட்டிக்காட்டி ‘இதை நீங்கள் எப்படி படமாக்குவீர்கள்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர், ‘எனக்கும் தெரியாது. ஆனால் அதை நாம் கண்டுபிடிப்போம்’ என்று பதிலளித்தார். பின்னர் படப்பிடிப்பின் போது அந்த காட்சியை மிகவும் சிறப்பாக உருவாக்கினார். ஒரு நடிகராகவும், இயக்குநராகவும், மனிதராகவும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் மூலம் நான் மேலும் செழுமையடைந்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
