சமீபத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், அந்த திரைப்படத்தில் நடித்த ஜான்வி கபூரின் கதாபாத்திரம் அளவுக்கு மீறிய கவர்ச்சியுடன் சித்தரிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இதற்காக அந்த திரைப்படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா பொதுவெளியில் மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகைகள் ஒரு பாடலுக்காக மட்டும் திரையில் தோன்றி நடனமாடுவதை ‘ஐட்டம் பாடல்’ என்று குறிப்பிடுவது தனக்கு பிடிக்கவில்லை என்று நடிகை தமன்னா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் தமன்னா பேசுகையில், “திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களை ‘ஐட்டம் சாங்’ என்று அழைப்பது எனக்கு பிடிக்காது. அந்த வார்த்தை பெண்களுக்கு மரியாதை அளிப்பதாக நான் கருதவில்லை. ஒரு பாடலுக்காக நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதை ‘ஐட்டம்’ என்று அழைப்பது அந்த பெண்ணின் உழைப்பிற்கு வழங்கப்படும் மரியாதையாக இருக்காது. இந்த மனப்போக்கில் மாற்றம் வர வேண்டும். நடிகைகளை வெறும் கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பார்க்காமல், அவர்களுடைய நடிப்பு திறமைக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
