எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட வரலாற்றுப் புனைவு திரைப்படமான ‘பாகுபலி’ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பாகுபலியாக பிரபாஸ், பல்வாள் தேவனாக ராணா டகுபதி, தேவசேனாவாக அனுஷ்கா ஷெட்டி, அவந்திகாவாக தமன்னா, சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன், கட்டப்பாவாக சத்யராஜ் என படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்த படம் சுமார் ரூ.2500 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியாகி, முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டு ‘பாகுபலி’ திரைப்படங்களும் உலக அரங்கில் இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தன. பின்னர் 2025ஆம் ஆண்டு, முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை ஒன்றிணைத்து ‘பாகுபலி – தி எபிக்’ என்ற பெயரில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ‘பாகுபலி’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் படப்பிடிப்பு சுமார் ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது.
படப்பிடிப்புக்குப் பிந்தைய அனுபவங்கள், கலைஞர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் படப்பிடிப்பின்போது சந்தித்த சவால்கள் குறித்து படக்குழுவினர் பல ஆண்டுகளுக்குப் பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆவணத் தொடர் ஒன்று தயாராகியுள்ளது. பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ‘பாகுபலி – தி டார்ச்பியரர்’ என்ற அந்த ஆவணத் தொடர் இன்று வெளியாகியுள்ளது. இந்த தொடரில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா டகுபதி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசிய ஒரு காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில் ராணா, “உலகம் இன்னும் அதற்கு தயாராகவில்லை. ஆனால் பாகுபலி…” என்று சஸ்பென்ஸ் ஏற்படுத்த, பிரபாஸ் சிரித்தபடியே தனது கையில் மூன்று விரல்களை உயர்த்திக் காட்டுகிறார். உடனே அவரை அனுஷ்காவும் ராணாவும் தடுத்து சிரிக்கின்றனர். ‘பாகுபலியின் பாரம்பரியம் தொடரும்’ என்ற வாசகத்துடன் அந்த காணொளி நிறைவடைகிறது. இதன் மூலம் ‘பாகுபலி’ திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்த ராஜமௌலியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக பலரும் காத்திருக்கின்றனர். ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் ‘வாரணாசி’ திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
