நான் சோர்வடைய இந்த பிரச்சினை தான் காரணம்… நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்த தகவல்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமீபத்தில் நான் வெளியிட்ட பதிவுகளின் கீழ் நீங்கள் பகிர்ந்த அனைத்து கருத்துகளையும் நான் பார்த்தேன். அவை எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தன. அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த சில காலமாக என் முகத்தில் சோர்வு தெரிகிறது என்பதை பலர் கவனித்திருக்கிறீர்கள். அதற்கான காரணம், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவுதான் இந்த சோர்வு. ஆனால் தற்போது நான் பெற்று வரும் இந்த சிகிச்சை என் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

அதே நேரத்தில், நீங்கள் என்மீது காட்டும் அன்பும் ஆதரவும், நான் நம்பிக்கையுடன் செய்து வரும் வேலையும், மேலும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொருவரிடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்கின்றன. அதனால்தான் உடல்நல சவால்கள் இருந்தபோதிலும், திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன்.

எனது உடல்நிலை விரைவில் மேம்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் காட்டிய அக்கறை, என் உடல்நலத்தை இன்னும் சிறப்பாக கவனித்துக்கொள்ள என்னை ஊக்குவித்துள்ளது. ஒவ்வொரு கருத்துக்கும், ஒவ்வொரு ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளின் இறுதிக்கட்டத்தில் நாங்கள் உள்ளோம். மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். வரும் ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தை நீங்கள் அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading