‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக தனது தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததுடன், வெளிப்படையான மிரட்டல்களையும் எதிர்கொண்டதாக நடிகர் விக்ராந்த் மாஸி தெரிவித்துள்ளார். 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.தீரஜ் சர்மா இயக்கிய இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ரித்தி டோக்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியானபோது அரசியல் சார்ந்த சர்ச்சைகளையும் எதிர்கொண்டது. இந்நிலையில் ஷேகர் சுமனுக்கு அளித்த பேட்டியில், இப்படத்தில் நடித்த அனுபவம் தொடர்பாக விக்ராந்த் மாஸி பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
“இந்தப் படத்தில் நடித்ததை நான் பெருமையாகவே கருதுகிறேன். ஆனால், படம் தொடர்பாக எனது வாட்ஸ்அப் எண் மற்றும் கார் எண் போன்ற தனிப்பட்ட தகவல்கள் கசிந்தன. சிலர் என்னை நேரடியாக மிரட்டினர். கடுமையான வசைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் தனது மகனுக்கு வெறும் ஆறு மாதங்களே ஆனிருந்ததால், இந்த சம்பவங்கள் தன்னை அதிகளவில் பாதித்ததாகவும் விக்ராந்த் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் தனது நிலை குறித்து வெளிப்படையாக பேசியதாகவும், பின்னர் தன்னை மிரட்டியவர்களின் நடவடிக்கைகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
‘டுவெல்த் பெயில்’, ‘செக்டர் 36’, ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ ஆகிய படங்கள் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தனது திரைப்பயணத்தில் முக்கியமான காலமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், தொடர்ந்து குடும்பத்தை விட்டு விலகியிருந்ததால் தனிமையாக உணர்ந்ததாகவும், தனது மகனையும் குடும்பத்தினரையும் அதிகம் தவறவிட்டதாகவும் விக்ராந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது படத்தை பிரதமர் பாராட்டியது தனக்கு நம்ப முடியாத அனுபவமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகன் பிறந்திருந்த நேரத்தில் குடும்பத்துடன் இருக்க முடியாமல் போனது தன்னை உணர்ச்சிவசப்பட வைத்ததாகவும், தனது மகன் தன்னை ‘அப்பா’ என்று அழைக்கும் தருணங்களில் அருகில் இருக்க முடியாதது வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் விக்ராந்த் மாஸி தெரிவித்துள்ளார்.
