தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் பாதிப்பால் சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்தார். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், தற்போது நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மா இண்டி பங்காரம்’. தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் கடந்த 19ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் கவுதமி, மஞ்சுஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சமந்தா பேசுகையில், படம் வெளியாகும் முன்பு “ஒரு டிக்கெட்டாவது விற்குமா, முதலீடு செய்த பட்ஜெட்டை திரும்பப் பெற முடியுமா?” என்ற அச்சம் இருந்ததாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றி இன்னும் முழுமையாக என்னுள் பதியவில்லை என்றே கூறுவேன். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். படப்பிடிப்பு நாட்களை குறைப்பதற்காக பல சவாலான சூழ்நிலைகளை கடந்து கடினமாக உழைத்தோம். திரைப்படம் வெளியாகும் முன்பு ஒரு டிக்கெட்டாவது விற்குமா, செலவிட்ட தொகையை மீட்டெடுக்க முடியுமா என்ற பயம் எங்களிடம் இருந்தது. ஏனெனில் தற்போதைய சினிமா துறையின் நிலை அப்படித்தான் உள்ளது. எந்த திரைப்படம் வெற்றி பெறும், எது தோல்வியடையும் என்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. நாம் சரியான நோக்கத்திற்காக திரைப்படம் எடுக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு, படம் சிறப்பாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.
