கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வட சென்னை’. இந்தப் படத்தில் அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வெளியான போது ‘வட சென்னை’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால், அதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ‘வட சென்னை 2’ திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புதிய தகவலை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் ‘கர’ திரைப்படம் வெளியானது என்றும், வருகிற 3-ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ வெளியாக உள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ வெளியாகும் என்றும், அதன் பின்னர் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘டயங்கரம்’ திரைப்படம் வெளியாகும் என்றும் கூறினார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “அந்தப் படத்தில் நான் எந்தவித சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவில்லை. தலைப்பு அறிவிப்பு வீடியோவில் மட்டுமே பங்கேற்றேன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் #D56 திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாக இருக்கும். அதன் பின்னர், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ‘வட சென்னை 2’ திரைப்படத்திற்கான பணிகளை தொடங்குவோம்” என்று ஐசரி கணேஷ் தெரிவித்தார்.
