இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் நடிகர் யோகி பாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “எனக்கும் அர்ஜுன் தாஸுக்கும் மிகவும் நெருக்கமான நட்பு உள்ளது. தொடர்ந்து அவருடன் பல திரைப்படங்களில் பணியாற்றி வருகிறேன். ஒரு ஹீரோவுக்கு நல்ல நண்பன் இருந்தாலே போதும், ஹீரோயின் கூட தேவையில்லை என்று நான் அடிக்கடி நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு எங்களுடைய நட்பு வலுவானது. அவர் எதிர்காலத்திலும் தனது திரைப்படங்களில் என்னை நடிக்க வைப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இயக்குநர் ஹரிஷை நான் இன்று மட்டும் அறிந்தவர் அல்ல. பல ஆண்டுகளாக அவரை தெரியும். பல திரைப்படங்களில் பணியாற்றிய காலத்திலிருந்தே அவரது உழைப்பையும், சினிமா மீதான அர்ப்பணிப்பையும் நேரில் பார்த்திருக்கிறேன். இயக்குநராக வேண்டும் என்ற அவரது ஆசையை பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் என்னிடம் பகிர்ந்திருந்தார். அப்போதே நான் அவரிடம், ‘நீ கண்டிப்பாக ஒரு நாள் இயக்குநராக வேண்டும்’ என்று கூறியிருந்தேன்” என்றார்.
மேலும், “இன்று அவர் இயக்குநராக உருவெடுத்து, அவரைப் பற்றி அனைவரும் பாராட்டி பேசுவதை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது அவரது பயணத்தின் தொடக்கம் மட்டுமே. இனி பெரிய நடிகர்களுடன், பெரிய படைப்புகளை இயக்கி மேலும் உயரங்களை அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார். இதையடுத்து பேசிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், “கடந்த ஐந்து ஆண்டுகளாக சினிமா வாய்ப்புகளுக்காக போராடி வந்தேன். தற்போது இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளேன். யோகி பாபுவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது. அவர் தனது வழக்கமான சம்பளத்தின் பாதியை மட்டுமே பெற்றுக்கொண்டு இந்தப் படத்தில் நடித்தார். அது எனக்காக செய்த மிகப்பெரிய உதவி” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
