நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அந்த புரோமோவில் இடம்பெற்ற அனிருத்தின் பின்னணி இசை சமூக வலைதளங்களில் டிரெண்டாகி கவனம் பெற்றது.
மேலும், இந்த திரைப்படத்தை முழுமையாக பிலிம் கேமராவில் படமாக்க இயக்குநர் நெல்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுவதுடன், 2027-ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்த திரைப்படம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “இயக்குநர் நெல்சன் இந்தப் படத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அதே நேரத்தில், நான் இந்த திரைப்படத்தில் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ‘கூலி’ திரைப்படத்திற்கு பிறகு நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகையாக மாறிவிட்டேன். கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் இந்த திரைப்படம் இந்திய திரைத்துறைக்கே ஒரு உண்மையான கொண்டாட்டமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
—
