தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
நகர்ப்புறத்தில் வாழும் நடுத்தர குடும்பங்களின் உணர்வுகள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தை முன்கூட்டியே பார்த்த தயாரிப்பாளர் மகேஷ் ராஜ், தனது சமூக வலைதளப் பதிவில், “‘கான் சிட்டி’ ஒரு விறுவிறுப்பான திரையரங்க அனுபவத்தை வழங்குகிறது. படம் முடிந்த பிறகும் அதன் தாக்கம் மனதில் நீடிக்கிறது. சிறப்பான கதை சொல்லலும் தரமான உருவாக்கமும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படமாக மாற்றியுள்ளது. உள்ளடக்கம்தான் எப்போதும் ராஜா என்பதை ‘கான் சிட்டி’ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் ஒரு திறமையான படைப்பாளர். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார். அவரது இந்த பதிவு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
