‘கேஜிஎப்’ மற்றும் ‘கேஜிஎப் 2’ திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்சிக்’. இந்த திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். முதலில் ஜூன் 4-ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியாக திட்டமிடப்பட்டிருந்த ‘டாக்சிக்’, வளைகுடா பிராந்தியத்தில் நிலவிய பதற்றம் மற்றும் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் சூழ்நிலை காரணமாக வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வளைகுடா நாடுகளில் திரையரங்குகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் வணிக ரீதியான காரணங்களாலும் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘டாக்சிக்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னடம் மற்றும் மலையாளத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது.
1970-களின் காலகட்டத்தில் கோவாவை பின்னணியாகக் கொண்டு நடைபெறும் கடத்தல் மற்றும் தாதா சாம்ராஜ்யத்தை மையமாகக் கொண்ட கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. யஷ் நடித்த ‘கேஜிஎப்’ முதல் பாகம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்ததுடன், ‘கேஜிஎப் 2’ உலகளவில் ரூ.1,250 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியிருந்ததால், ‘டாக்சிக்’ திரைப்படத்திற்கும் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், தமிழில் மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த கீது மோகன்தாஸ் தான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
—
