கடன் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் ஆதர்ஷ் மதிகாந்துக்கு, கோவை அருகே வசித்து வந்த அவரது தாத்தா தனது சொத்துக்களை பேரன் மற்றும் பேத்திகளின் பெயரில் எழுதிவைக்க விரும்புவதாக தகவல் கிடைக்கிறது. இதையடுத்து, தனது மனைவி மற்றும் தங்கையுடன் அந்த கிராமத்திற்கு செல்லும் அவர், அங்கு சென்ற பிறகு எதிர்பாராத பல அமானுஷ்ய சம்பவங்களை சந்திக்கிறார். அதுமட்டுமின்றி, தன்னை அங்கு வரவழைத்த நபரும், அவரது தாத்தாவும் பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டனர் என்ற அதிர்ச்சிகரமான உண்மையும் அவருக்கு தெரியவருகிறது. இறுதியில், தாத்தாவின் சொத்துகளுக்கு என்ன ஆனது? ஆதர்ஷ் மதிகாந்த் எதிர்கொண்ட அமானுஷ்ய சம்பவங்களின் பின்னணி என்ன? என்பதற்கான பதில்களையே படத்தின் மீதிக்கதை விளக்குகிறது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆதர்ஷ் மதிகாந்த், கடன் பிரச்சினைகளால் அவதிப்படும் இளைஞராகவும், அமானுஷ்ய சக்திகளின் தாக்கத்தில் சிக்கிக்கொள்ளும் மனிதராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பயம், குழப்பம், பதற்றம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.
ஜோவிதா லிவிங்ஸ்டன் குடும்பப் பெண் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக அமைந்துள்ளார். அருவி மதன் மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் குறைந்த காட்சிகளில் தோன்றினாலும் மனதில் நிற்கும் நடிப்பை வழங்கியுள்ளனர். அமுதவாணன், ரபிக் பாட்ஷா, கே. பாக்யராஜ், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் கதையின் தேவைக்கு ஏற்ப தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
ஒரு வீட்டை மையமாகக் கொண்டு நகரும் கதையை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் கே.எஸ். கிஷான். திகில், அமானுஷ்யம் மற்றும் குடும்ப பின்னணியில் மறைந்து கிடக்கும் மர்மங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. சில இடங்களில் கதை சொல்லும் விதத்தில் குழப்பங்கள் இருந்தாலும், திகில் காட்சிகளும் தொழில்நுட்ப தரமும் அந்த குறைகளை ஓரளவு மறக்கச் செய்கின்றன.
ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால், திகில் காட்சிகளை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசையும் பல காட்சிகளில் பரபரப்பையும் பய உணர்வையும் அதிகரிக்க உதவியுள்ளது.
