இயக்குநர் அகிரன் மோசஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வெக்கை’. இந்த படத்தில் நடிகர் ஜீவி பிரகாஷ் உற்சாகமும் அதிரடியும் நிறைந்த இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகரான ஸ்ரீநாத் பாஸி முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். நடிகை ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சுனில், மைம் கோபி, லிங்கேஷ், லிசா சின்னு, லட்சுமி பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளதுடன், ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவை கவனித்துள்ளார்.
இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் அகிரன் மோசஸ் கூறியதாவது: “நாம் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு சாலைத் தகராறை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. ஒரு சில நொடிகளில் ஏற்படும் கோபம், பலரது வாழ்க்கையையே எவ்வாறு தலைகீழாக மாற்றிவிடுகிறது என்பதை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது அமைந்துள்ளது.
பொதுவாக சாதாரணமாகத் தோன்றும் சாலைத் தகராறுகளின் பின்னணியில் மறைந்து கிடக்கும் அகங்காரம், கோபம் மற்றும் அவற்றால் உருவாகும் எதிர்பாராத விளைவுகளே வெக்கை திரைப்படத்தின் முக்கிய கருவாக அமைகின்றன. விறுவிறுப்பான திரைக்கதையுடன் மனிதர்களின் உளவியல் சிக்கல்கள் மற்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் அனைத்தும் கலந்த முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் கமர்ஷியல் என்டர்டெய்னராக இந்த படம் உருவாகியுள்ளது” என்று இயக்குநர் அகிரன் மோசஸ் தெரிவித்துள்ளார்.
—
