ஆசை ஆசையாய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா. அதன் பின்னர் சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கோ, ரவுத்திரம், கலகலப்பு 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. இதன் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய ஜீவாவுக்கு தொடர்ந்து புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது பிளாக் திரைப்பட இயக்குநரின் புதிய படம் மற்றும் இயக்குநர் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகும் ஜாலியா இருந்த ஒருத்தன் ஆகிய இரண்டு படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு புதிய திரைப்படமும் இணைந்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஜீவாவின் இந்த புதிய திரைப்படத்தை கிடா திரைப்படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கவுள்ளார். கிடா திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்தை கருடன் மற்றும் மாமன் திரைப்படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவை மேற்கொள்ளும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தனது தந்தையுமான ஆர்.பி. சவுத்ரியின் மறைவு காரணமாக ஆழ்ந்த துயரத்தில் இருந்த ஜீவா, அந்த வேதனையில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறார். தற்போது மீண்டும் முழு கவனத்தையும் சினிமா பணிகளின் மீது செலுத்தத் தொடங்கியுள்ள அவர், தொடர்ந்து பல புதிய படங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
