இதயம் முரளி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வான் வான்’ பாடலின் BTS வீடியோ வெளியீடு!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அதர்வா, பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றவர். சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது நடிப்பிற்காக நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவுடன் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன் மற்றும் நிஹாரிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

டிராகன் திரைப்படத்தில் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றவர் நடிகை கயாடு லோஹர். அந்த திரைப்படத்திற்குப் பிறகு இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகையாக அவர் மாறியுள்ளார். அதேபோல், இதயம் முரளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் மீண்டும் நடிகராக களமிறங்கியுள்ளார். பாய்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு முழுமையாக இசைத்துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் இடம்பெற்றுள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் பராசக்தி மற்றும் இட்லி கடை திரைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், அந்த வரிசையைத் தொடர்ந்து தற்போது தனது இயக்கத்தில் உருவாகும் இதயம் முரளி திரைப்படத்தையும் அவரே தயாரித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் அதர்வா நிறைவு செய்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இதயம் முரளி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வான் வான்’ பாடலின் படப்பிடிப்பு காட்சிகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அதர்வாவின் தந்தையான மறைந்த நடிகர் முரளி, இதயம் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழைப் பெற்றவர். அந்த திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. அதேபோன்று, இதயம் முரளி திரைப்படமும் நடிகர் அதர்வாவின் திரைப்பயணத்தில் முக்கிய வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading