ஜமா திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் திரையுலகில் கவனம் பெற்றவர் பாரி இளவழகன். அந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதுவரை ஆறு திரைப்படங்களை தயாரித்துள்ளது. அவற்றில் குட் நைட், டூரிஸ்ட் பேமிலி, லவ்வர் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கவனம் ஈர்த்தன. இதனைத் தொடர்ந்து தனது ஏழாவது திரைப்படம் குறித்த அறிவிப்பை ஆங்கில புத்தாண்டு தினத்தில் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
ஜமா திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற பாரி இளவழகன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதனுடன் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு பாரி இளவழகன் கதை மற்றும் திரைக்கதை எழுதியதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா மீண்டும் நடிப்புத் துறைக்கு திரும்பியுள்ளார். அவருடன் சேத்தன், வைரலான யூடியூப் குழுவான பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு மற்றும் சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அன்பே டயானா திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். மேலும், ‘பெரம்பூர் கானா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அன்பே டயானா திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த சூழலில் தற்போது அன்பே டயானா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தொடுவானத்தில்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை முத்தமிழ் எழுதியுள்ள நிலையில், பாடகர் சூரஜ் சந்தோஷ் பாடியுள்ளார். பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும், இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
