ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜே.பி. தென்பாதியான், தடகள வீரர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் ‘அறம்’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ‘அங்கீகாரம்’ திரைப்படம் வருகிற ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விளம்பரப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், படத்தின் இரண்டாவது பாடலான ‘வெற்றி விழா ஆன்தம்’ பாடலும் வெளியாகியுள்ளது. விளையாட்டு வீரர்களின் போராட்டமிக்க வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம், படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.
