“இசை என்பது இறைவன் கொடுத்த வரம்” – திருவண்ணாமலை நினைவுகளை பகிர்ந்த இளையராஜா

சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற ‘பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு பேசினார். அவர் எழுதி இசையமைத்த இந்த ஆல்பத்தை சஞ்சய் சுப்பிரமணியன் பாடியுள்ளார். திருவண்ணாமலையுடன் தன்னுடைய ஆழமான தொடர்பை நினைவுகூர்ந்த இளையராஜா, 1980-களிலிருந்தே அங்கு கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறினார். தாம் மலை சுற்றுவதைப் பார்த்து பலரும் அதே வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள் என்று கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பௌர்ணமி நாட்களில் தாம் திருவண்ணாமலைக்கு சென்றால் மழை பெய்யும் என்று குஞ்சு சுவாமிகள் சொல்லியதாகவும், அங்கு சென்றவுடன் காலில் செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்த்துவிடுவேன் என்றும் கூறினார். கிரிவலத்தின் போது காலில் முள் குத்தினாலும் அதை ஒரு அனுபவமாகவே எடுத்துக்கொண்டேன் என்றும், தனியாக அமர்ந்து மாணிக்கவாசகர் பாடல்களை நினைத்து தியானிப்பேன் என்றும் அவர் பகிர்ந்தார்.

வீட்டிற்கு திரும்பிய பிறகு மூன்று மாதங்கள் காலில் வலி காரணமாக நடக்கவே முடியவில்லை என்றும், அதன் பின்னர் ஒருநாள் திடீரென ‘பாடிக்கிடைத்த பரம்பொருளே’ என்ற பாடல் மனதில் உதித்ததாகவும் கூறினார். “அந்த வரிகள் நான் எழுதியதா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது; அது இறைவன் கொடுத்தது” என்றார். இசையை தெய்வீக கலை என்று வர்ணித்த இளையராஜா, ஆன்மிகம் குறித்து கேட்கப்பட்டபோது, “வாழ்க்கையை விட தனியாக ஆன்மிகம் எதுவும் இல்லை; வாழ்வதே ஆன்மிகம்” என்று பதிலளித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading