மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் தற்போது பல மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘ஐயம் கேம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகும் நேரடி தெலுங்கு படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
மற்றொரு பக்கம், இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகும் துல்கர் சல்மானின் 41-வது படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், இசையையும் ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருப்பதால், விரைவில் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தப் படத்தின் முதல் பாடலான ‘வானே வானே’ பாடலை படக்குழு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே துல்கர் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
