தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தனுஷ், ‘கர’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘ஓம்’ திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த ஆக்ஷன் படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஓம்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘அலாக்கா லோவா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
