‘நூறு சாமி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் ஹெச் வினோத்!

இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி, அதன் பின்னர் நடிகராகவும் தனக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளார். ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற அவர், கதாநாயகனாகவும் வெற்றிகரமான பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம், விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடல் இன்றுவரை ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த சூழலில், இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் திரையரங்கு வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம், டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இயக்குநர் எச்.வினோத், ‘நூறு சாமி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் தற்போது ‘நூறு சாமி’ திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் படம் உண்மையிலேயே மிகச் சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். கட்டாயம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டிய படம். மிகவும் அற்புதமாகவும் பிரமாதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார். எச்.வினோத்தின் இந்த பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, ‘நூறு சாமி’ படக்குழுவும் சமூக வலைதளத்தில் சிறப்பு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. இயக்குநரின் இந்த பாராட்டு, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading