மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இயக்குநர் பாக்யராஜ், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, நடிகை ராதிகா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், கலை உலகிற்கும் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுவதால், அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.
தமிழ் சினிமாவில் கிராமத்து வாழ்க்கையை இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் திரையில் பதிவு செய்து, பல தலைமுறைகளுக்கு நினைவில் நிற்கும் படைப்புகளை வழங்கிய பாரதிராஜாவின் மறைவு திரையுலகை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். அவரது திரைப்படப் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த அரசு மரியாதை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனிடையே, இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்புகளும், தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜா ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
