‘தொடரும்’ படத்தில் பாரதிராஜா சாருடன் பணியாற்றியது என் வாழ்நாளில் பெருமையான விஷயம் – நடிகர் மோகன்லால்!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக போற்றப்பட்ட பாரதிராஜா, தனது 84-வது வயதில் நேற்று (ஜூன் 10) காலமானார். அவரது மறைவு செய்தி திரையுலகத்தையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பல்வேறு திரைப்பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு, பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய காலத்தில் பெற்ற அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மண்ணில் கவிதையையும், மௌனத்தில் உண்மையையும், ஒவ்வொரு திரைப்படக் காட்சியிலும் ஆன்மாவையும் கண்டறிந்த ஒரு மகத்தான இயக்குநர் அவர். ‘தொடரும்’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் என்றும் நான் பெருமையாக நினைத்து பாதுகாக்கும் ஒரு அரிய நினைவாக இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவர் விட்டுச் சென்ற கலை மரபு வருங்கால தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது இழப்பு எங்களை ஆழமாக வாட்டுகிறது” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா நடித்த கடைசி திரைப்படம் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘தொடரும்’ திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, மலையாளத்தில் அவர் நடித்த ஒரே திரைப்படமும் இதுவே ஆகும். இந்த படத்தில் பாரதிராஜா ‘மாஸ்டர் பழனிச்சாமி’ என்ற ஸ்டண்ட் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது சீடராகவும், ஸ்டண்ட் கலைஞராகவும் மோகன்லால் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து வரும் காட்சிகள் குறுகிய நேரமே இடம்பெற்றாலும், அந்த காட்சிகள் அனைத்தும் சென்னையை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டிருந்தன.

இந்த திரைப்படத்தை இயக்கிய தருண் மூர்த்தி, “இந்த கதாபாத்திரத்தை எழுதும்போதே பாரதிராஜாவை மனதில் வைத்துத்தான் உருவாக்கினேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்கள் கழித்து பாரதிராஜாவிடம் தேதிகள் கேட்கச் சென்றபோது, “மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவும், அவருடன் நேரம் செலவிடவும் கிடைக்கும் வாய்ப்புக்காகவே இந்த படத்தில் நடிக்க சம்மதிக்கிறேன்” என்று கூறி உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போதும் உடல்நலக் குறைவு இருந்தபோதிலும், அதனை பொருட்படுத்தாமல் தனது பங்கை சிறப்பாக நிறைவேற்றியதாக அவர் நினைவுகூர்ந்தார்.

படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலிடம் பாரதிராஜா மிகுந்த பாசத்துடனும் நெருக்கத்துடனும் பழகியதாக தருண் மூர்த்தி கூறியுள்ளார். “மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது என் வாழ்க்கையின் பெரும் பாக்கியம்” என்று பாரதிராஜா கூறியபோது, “இல்லை, உங்களுடன் இணைந்து நடிப்பதுதான் என் வாழ்நாள் பாக்கியம்” என்று மோகன்லால் பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே இருந்த அந்த அன்பும் மரியாதையும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்ததாக அவர் கூறினார்.

மேலும், மோகன்லாலின் தனித்துவமான நடைபாணி குறித்து அறிந்த பாரதிராஜா, அதனை நேரில் காட்டுமாறு கேட்டதாகவும், மோகன்லால் அதை செய்து காட்டியவுடன், அவருடன் சேர்ந்து அதேபோல் நடந்து சென்றதாகவும் தெரிவித்தார். அந்த தருணத்தை பார்த்த படக்குழுவினர் கைதட்டி ஆரவாரம் செய்ததாகவும் அவர் கூறினார். படப்பிடிப்பு முழுவதும் இவ்வாறான பல இனிய நினைவுகள் உருவானதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.

பின்னர் டப்பிங் பணிகளின் போது, உடல்நலக் குறைவு காரணமாக வேறு யாரையாவது வைத்து குரல் கொடுக்கலாம் என குழுவினர் யோசித்தபோதும், தனது கதாபாத்திரத்திற்கு தானே குரல் கொடுக்க வேண்டும் என்று பாரதிராஜா வலியுறுத்தியதாக தருண் மூர்த்தி தெரிவித்தார். அந்த நேரத்தில் அவருக்கு நினைவாற்றல் தொடர்பான சிரமங்கள் இருந்தபோதிலும், அருகில் அமர்ந்து வசனங்களை மெதுவாக சொல்லிக் கொடுத்து அவரை டப்பிங் பேச வைத்ததாகவும், அந்த அனுபவங்கள் அனைத்தும் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading