தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதற்கான தட்கல் முறை ரத்து !

ரயில் பயணங்களில் வழக்கமான முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைக்காத சூழலில், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் முறையின் மூலம் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது வழக்கம். இதேபோன்ற தட்கல் நடைமுறை, திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கும் நடைமுறையில் இருந்து வந்தது. இதன் மூலம் அவசர தேவையுள்ள தயாரிப்பாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி விரைவாக தணிக்கைச் சான்றிதழைப் பெற முடிந்தது.

குறிப்பாக பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், படத்தின் வெளியீட்டு தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டு, இறுதி நேரத்தில் மூன்று மடங்கு வரை கூடுதல் கட்டணம் செலுத்தி தணிக்கைச் சான்றிதழை பெற்றுவந்தன. இதனால் பொருளாதார ரீதியாக அந்த அளவிலான செலவை ஏற்க முடியாத சிறிய தயாரிப்பாளர்கள் மற்றும் சுயாதீன திரைப்பட இயக்குநர்கள் தங்களது படங்களுக்கான தணிக்கைச் சான்றிதழைப் பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியிருந்தது.

இந்த நிலையில், தற்போது திரைப்பட தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த தட்கல் முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட வரிசை மற்றும் மூப்பு அடிப்படையில் மட்டுமே தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

தட்கல் முறை நீக்கப்பட்டிருப்பது சிறிய பட தயாரிப்பாளர்கள், புதிய இயக்குநர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படங்களை உருவாக்குபவர்களுக்கு மிகவும் சாதகமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அதிக பணம் செலுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலை முடிவுக்கு வந்துள்ளதுடன், தணிக்கை வாரியத்தின் முன் அனைத்து தயாரிப்பாளர்களும் சமமான வாய்ப்பைப் பெறும் ஆரோக்கியமான சூழல் மீண்டும் உருவாகியுள்ளதாக திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading