புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு 84 வயதாகும். 1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், கிராமிய வாழ்க்கை மற்றும் மண்ணின் மணத்தை பிரதிபலிக்கும் பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கி தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர். அவரது மறைவு ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் கலை உலகைச் சேர்ந்த பலரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் கிராமங்களின் அழகையும், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையையும், காதலையும், உயிரோட்டத்தையும் திரையில் அவ்வளவு உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் யாரும் வெளிப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரதிராஜாவின் படைப்புகள் பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது பதிவில், “என் இசையை தென்னிந்தியாவின் மிகவும் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. உங்கள் படைப்புகள் எப்போதும் மக்களின் மனதில் வாழும். அமைதியாக இளைப்பாறுங்கள் பாரதிராஜா அவர்களே” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர். ரகுமானின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
—
