த்ரில்லர் திரைப்பட இயக்குநர் என்ற அடையாளத்திற்குள் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை… இயக்குனர் ஜீத்து ஜோசப் டாக்!

மலையாள திரையுலகில் ‘திரிஷ்யம்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தவர் ஜீத்து ஜோசப். மலையாள சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய அளவிலும், இந்தி திரைப்பட உலகிலும் தனது தனித்துவமான படைப்புகளின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். குறிப்பாக மர்மம், த்ரில் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற அவர், பெரும்பாலும் சீரியஸான கதைக்களங்களை தேர்வு செய்து வெற்றிகரமாக கையாள்ந்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ‘நுனக்குழி’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் தனது திறமையை வெளிப்படுத்த முயன்றார் ஜீத்து ஜோசப். வழக்கமாக த்ரில்லர் திரைப்படங்களை இயக்கி வந்த அவர், அந்த திரைப்படத்தின் மூலம் வேறுபட்ட முயற்சியை மேற்கொண்டார். இந்த நிலையில், தற்போது த்ரில்லர் படங்களிலிருந்து விலகி, முழுமையான குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றை இயக்கத் தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திரைப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தக் கதை ‘திரிஷ்யம்’ திரைப்படம் உருவாகும் காலத்திற்கு முன்பே ஜீத்து ஜோசப்பின் மனதில் தோன்றியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரித்விராஜை வைத்து ‘மெமரீஸ்’ திரைப்படத்தை இயக்கிய காலகட்டத்திலேயே இந்தக் கதையின் அடிப்படை கருவை அவர் உருவாக்கியிருந்தார். அப்போது அந்தக் கதையின் அவுட்லைனை கேட்ட பிரித்விராஜ், “இந்த திரைப்படத்தில் நானே நடிக்கிறேன்” என்று உடனடியாக உறுதியளித்திருந்ததாக ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் பின்னர் ‘திரிஷ்யம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதன் காரணமாக ஜீத்து ஜோசப் தொடர்ந்து த்ரில்லர் வகை திரைப்படங்களில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவானது. இதன் காரணமாக இந்த குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படத்தை உருவாக்க போதிய நேரத்தை ஒதுக்க முடியாமல் போய்விட்டதாக அவர் கூறியுள்ளார். தற்போது தனது அடுத்த படைப்பாக இந்தக் கதையைத்தான் உருவாக்கி வருவதாகவும், வெறும் த்ரில்லர் திரைப்பட இயக்குநர் என்ற அடையாளத்திற்குள் மட்டும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு வகையான கதைகளை இயக்கும் திறன் கொண்ட இயக்குநராக தன்னை நிரூபிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading