இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன்..‌‌. நடிகை ராதிகா உருக்கம்!

தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் ராதிகா சரத்குமார். 1978-ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், கடந்த ஐந்து தசாப்தங்களாக தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து தனக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளார். திரைப்படங்களைத் தொடர்ந்து தொலைக்காட்சி துறையிலும் வெற்றிகரமாக செயல்பட்டு, பல்வேறு தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ‘தாய் கிழவி’ திரைப்படம் 90 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றி அவரது நீண்டகால கலைப் பயணத்திற்கு மேலும் பெருமை சேர்த்தது. இதற்கிடையில், இயக்குநர் பாரதிராஜா நேற்று காலை காலமான செய்தியை அறிந்த உடனேயே ராதிகா அவரது இல்லத்திற்குச் சென்று அங்கேயே தங்கி, ஒரு மகளைப் போல அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று அஞ்சலி செலுத்த வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து இன்று தேனியிலும் அவர் இருந்து வருகிறார்.

நேற்று இரவு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்ட ராதிகா, “என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்; மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா. இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன். இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது. என் வலியை உணர்ந்து, என்னுடன் நின்று, அன்பும் ஆதரவும் அளித்த ஒவ்வொருவருக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் நினைவுகளும், அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும் என்னுடன் என்றும் பயணிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

பாரதிராஜாவை சமீபத்தில் நேரில் சந்தித்திருந்த ராதிகா, அந்த சந்திப்பு தொடர்பான வீடியோவையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அப்போது ‘தாய் கிழவி’ திரைப்படத்தை பார்த்ததாக கூறிய பாரதிராஜா, “இந்த படத்திற்காக ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்” என்று மனமார வாழ்த்தியிருந்தார். அதற்கு பதிலளித்த ராதிகா, “நீங்கள் சொல்வது போல அந்த விருது கிடைத்தால், முதலில் உங்கள் காலடியில் வந்து வைப்பேன்” என்று உணர்ச்சியுடன் கூறியிருந்தார். அந்த ஆசை நிறைவேறுமா என்பது இனிமேல்தான் தெரியவரும். ஆனால் அதற்குள் தனது குருநாதரான பாரதிராஜாவை இழந்துவிட்டது ராதிகாவுக்கு மிகப்பெரிய வேதனையாக மாறியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading