நடன நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான குமரன் தங்கராஜன், பின்னர் சின்னத்திரையில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். ‘ஈரமான ரோஜாவே’ தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான அவர், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து ‘மாய தோட்டா’, ‘வதந்தி’ உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். பின்னர் ‘குமாரசம்பவம்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரை கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்நிலையில், ‘இறுதிப்பக்கம்’ படத்தை இயக்கிய மனோ கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் குமரன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்மேகா மணிமேகலை நடித்துள்ள நிலையில், ராஜேஷ் பாலச்சந்திரன், அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். ஜோன்ஸ் ரூபர்ட் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மர்மம் மற்றும் திரில்லர் அம்சங்கள் நிறைந்த இந்த திரைப்படம் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குமரன் தங்கராஜன் நடித்துள்ள இந்த புதிய படத்தின் தலைப்பு, வெளியீட்டு தேதி மற்றும் பிற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
