‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற மாளவிகா மனோஜ் மற்றும் மூத்த இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படம் ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தென் தமிழக முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை முறை மற்றும் காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், கடையநல்லூர் பின்னணியைச் சேர்ந்த ‘நிலோபர் நிஷா’ என்ற முஸ்லிம் பெண் கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வட்டார வழக்கு தமிழ் குறித்து கேட்கப்பட்டபோது, படம் முழுவதும் தனக்கு வசனமே இல்லை என்று மாளவிகா மனோஜ் ஆச்சரியப்படுத்தும் தகவலை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறுகையில், மாளவிகாவுக்கு முழுப் படத்திலும் ஒரே ஒரு வசனம் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். அதுவரை அவர் கண்கள் மற்றும் உடல் மொழி மூலமாகவே அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், அந்த ஒரு வசனம் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.
