இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, பின்னர் நடிகராகவும் வெற்றிகரமான இடத்தைப் பிடித்தார். ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்கள் அவருக்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கின. குறிப்பாக இயக்குநர் சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் விஜய் ஆண்டனியை முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்த்தியது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடல் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.
இந்த வெற்றிக்கூட்டணி தற்போது ‘நூறு சாமி’ என்ற புதிய படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டிருந்தார். மேலும், டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றன.
‘மாய கனவோ’ என்ற முதல் பாடலை மோகன் ராஜன் வரிகளில் சின்மயி மற்றும் கபில் கபிலன் பாடியுள்ளனர். தொடர்ந்து ‘அம்மா அம்மாதான்’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் மூன்றாவது பாடலான ‘ரீங்காரா’வும் வெளியிடப்பட்டது. தணிக்கை வாரியத்திடம் இருந்து ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். ‘நூறு சாமி’ திரைப்படம் வரும் ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
