தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருபவர்களில் நடிகர் ஆர்யா முக்கியமானவர். ‘நான் கடவுள்’, ‘மதராசப்பட்டினம்’, ‘அவன் இவன்’, ‘இரண்டாம் உலகம்’, ‘மகாமுனி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். அண்மையில் வெளியான அவரது ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. தற்போது இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆர்யாவின் 36வது திரைப்படமான ‘அனந்தன் காடு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை நடிகர்கள் கார்த்தி மற்றும் விஷால் சமீபத்தில் வெளியிட்டனர். இந்த திரைப்படத்தில் நிகிலா விமல், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் குமார் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ‘ரன் பேபி ரன்’ படத்தை இயக்கிய ஜியென் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ‘எம்புரான்’ திரைப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதிய முரளி கோபி, இந்த திரைப்படத்திற்கும் கதையை எழுதியுள்ளார். மேலும், ‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘அனந்தன் காடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
