‘ராக்கா’ திரைப்படத்தில் இணைந்த பெமினா ஜார்ஜ்!

‘புஷ்பா’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்காக இந்தியாவின் பல்வேறு மொழித் திரைப்படத் துறைகளில் இருந்து முக்கிய நடிகர், நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைத்து வருகிறார் இயக்குநர் அட்லி. அந்த வகையில், மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை பெமினா ஜார்ஜும் தற்போது இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு மலையாளத்தில் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘மின்னல் முரளி’ திரைப்படத்தில் ‘புரூஸ்லி பிஜி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெமினா ஜார்ஜ் ரசிகர்களிடையே பிரபலமானார். அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பை பார்த்ததன் மூலமே இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், இதுகுறித்த தகவலை அவரே தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய பெமினா ஜார்ஜ், “2004ஆம் ஆண்டு வெளியான ‘ஹேப்பி’ திரைப்படத்தை பார்த்ததிலிருந்து நான் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறேன். அவருடன் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிப்பேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. இந்த திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும், இவ்வளவு பெரிய கலைஞர்கள் மற்றும் ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading