இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், ராம்சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படமான ‘பெத்தி’ வருகிற ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அதன் வணிக விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தகவல்களின் அடிப்படையில், ‘பெத்தி’ திரைப்படத்தின் மொத்த வியாபாரம் சுமார் 213 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ராம்சரண் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் சுமார் 221 கோடி ரூபாய் வியாபாரம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், அதனை விட சுமார் 3 கோடி ரூபாய் மட்டுமே குறைவாக ‘பெத்தி’ வணிகம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கான திரையரங்கு உரிமைகள் மட்டும் சுமார் 135 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு வெளியீட்டு உரிமைகள் 34 கோடி ரூபாய்க்கும், ஹிந்தி வெளியீட்டு உரிமைகள் 25 கோடி ரூபாய்க்கும், கர்நாடகா பகுதி உரிமைகள் 17 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் தமிழ்நாட்டிற்கான வெளியீட்டு உரிமைகள் சுமார் 5 கோடி ரூபாய்க்கும், கேரளா மாநில உரிமைகள் 2 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் படம் வெளியாவதற்கு முன்பே கணிசமான வணிக வெற்றியை பதிவு செய்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
